Wednesday, 2 March 2016

பாசம்
********
ஒரு ஊரில் ஒரு தம்பதியினர் சந்தோஷமாக வாழ்ந்து வந்தார்கள் அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை இருந்தது,அவள் பெயர் அனிதா. அவள் தாய் மீண்டும் கருவுற்றிருந்தாள். அவர்களுக்கு தெரியும் வயிற்றில் வளர்வது ஆண் குழந்தையாகத்தான் இருக்கும் என்று.
பெற்றோர்கள் இருவரும் அனிதாவிடம் உனக்காக ஒரு தம்பி பாப்பா வரப்போகிறான். நீயும் அவனும் சேர்ந்து ஜாலியா விளையாடப்போறீங்க என்று சொல்லியே வளர்த்தார்கள்.
அனிதா அவள் அம்மா வயிற்றில் தினமும் கைகளால் தடவிக்கொண்டே டேய் தம்பி சீக்கிரம் வெளியே வாடா நாம ஜாலியா விளையாடலாம் நான் உன்னை யாருக்கும் குடுக்க மாட்டேன், நான் மட்டுமே உன் கூட விளையாடுவேன் என்று சொல்லிக்கொண்டே இருப்பாள்.
அனிதா இன்னும் முகம் பார்க்காத தன் தம்பியிடம் அவ்வளவு பாசமாக இருப்பதை பார்த்து அவள் பெற்றோர் மகிழ்ச்சி அடைந்தார்கள்.அனிதாவுக்கும் தினமும் அம்மா வயிற்றில் இருக்கும் குழந்தையிடம் பேசுவதே வாடிக்கையாக இருந்தது.
நாட்கள் உருண்டோடின பிரசவ வலி எடுக்கவே மருத்துவமனையில் சேர்த்தார்கள்.பிரசவம் நார்மலாக இருக்கும் என்று நினைத்தார்கள் ஆனால் மிக சிக்கலாகி ஆப்ரேஷன் பண்ணிதான் குழந்தையை வெளியே எடுத்தார்கள்.மருத்துவர்கள் குழந்தை மிக பலவீனமாக இருக்கிறது இன்னும் சில நாட்களே உயிரோடு இருக்கும் என்று கூறி ICU வில் அட்மிட் பண்ணினார்கள்.
அனிதாவையும் அவள் தந்தையையும், குழந்தையையும் அம்மாவையும் பார்க்க அனுமதிக்கவே இல்லை.பிறகு அனிதாவின் தந்தையை மட்டும் அனுமதித்தார்கள் அவர் உள்ளே சென்று குழந்தையை பார்த்துவிட்டு வந்தார்.
ஒரு வாரம் ஓடி விட்டது அனிதா அடம் பண்ண ஆரம்பித்தாள் நீ மட்டும் பார்த்துட்டு வந்தியே நானும் தம்பியை பார்க்கனும் என்று கத்தினாள்.உன் தம்பி சாமிக்கிட்ட போகபோறான் உன்னை மருத்துவமனையில் பார்க்க அனுமதிக்கமாட்டாங்கம்மா என்று அவள் அப்பா சொன்னார்.அவள் அழுது ஆர்ப்பாட்டம் பண்ணவே சரி நாளைக்கு எப்படியாவது உன்னை உள்ளே கூட்டிட்டு போறேன் என்றார்.
மறுநாள் மருத்துவமனயில் அனிதாவையும் குழந்தையை பார்க்க அனுமதிக்கவேண்டும் என்று கேட்டார் ஆனால் குழந்தையை ICU வுக்குள் செல்ல அனுமதிக்கமாட்டோம் என்று கூறினார்.பிறகு அவர்கள் கெஞ்சுவதை பார்த்து அனுமதித்தார்கள்.
அனிதா உள்ளே ஓடிச் சென்று குழந்தையின் பிஞ்சு விரலை பிடித்தாள்,அவள் கை பட்டதும் குழந்தை லேசாக அசைந்தது. ’டேய் தம்பி எழுந்து வாடா நாம விளையாடலாம்’ என்றாள். குழந்தை லேசாக மூச்சு விட ஆரம்பித்தது. ’உன்னை நான் சாமிக்கிட்ட கொடுக்கமாட்டேன், நானே வச்சுக்குவேன், நீ என் கூடத்தான் இருக்கனும்’ என்றாள். இப்போது குழந்தையின் மூச்சு சீராக வர ஆரம்பித்தது.
மருத்துவர்களே ஆச்சரியப்பட்டார்கள் குழந்தையை பரிசோதித்து பார்த்து விட்டு இனி நீங்கள் பயப்படத் தேவை இல்லை என்றார்கள்.
நாம ஒரு பொருள் மேல உண்மையான பாசம் வச்சிட்டா அந்த ஆண்டவனே நினைச்சாலும் நம்ம கிட்ட இருந்து பிரிக்க முடியாதுங்க...!!
★ஒரு கிராமத்தில் ஒர் நாகபாம்பு இருந்தது. அந்த பாம்பு வழியிலே யாரையும் செல்லவிடாது..அங்கு சென்ற பலரை தீண்டி கொன்றது. கிராமத்தினர் அந்த வழியை உபயோகிக்கவே அஞ்சினர். ஒரு நாள் அந்த வழியாக ஒரு குரு வந்தார்.. அந்த வழியை அவர் கடக்க முற்பட்ட போது எல்லோரும் அவரை தடுத்தார்கள் ஆனாலும் அவர் போனார்.
★அவரை தீண்ட அந்த நாகம் வந்தது.. ஆனால் அவர் தன்மை நாகபாம்பையே அமைதியடைய செய்தது. அந்த நாகபாம்பிடம் குரு "ஏன் நாசம் செய்கிறாய், கொலையாளி ஆகி என்ன அடையப்போறாய், அதில் என்ன பயன்" என கூறி அதற்கு அமைதியை கற்றுக் கொடுத்தார்..அன்றில் இருந்து அந்த நாகம் அமைதி காக்க தொடங்கியது.!
★யாரையும் அதற்கு தீண்ட பிரியம் இல்லையென அறிந்த கிராம மக்கள் தைரியம் பெற்று அந்த நாகபாம்பை கல்லெறிவதும் குச்சி கொண்டு அடிப்பதுமாக துன்புறுத்தினார்கள். அது துன்பம் தாங்க முடியாது புற்றில் உணவின்றி ஒளிந்து இருந்தும் அதை கொடுமைப் படுத்தினார்கள்.
★ஒரு வருடத்துக்கு பின் அந்த குரு அந்த பக்கமாக வந்தார். பரவசத்தோடு அவர்பாதத்தில் வந்து பணிந்து நின்றது. அதன் உடலில் தழும்புகளை கண்ட குருக்கு எல்லாம் புரிந்து. "உனக்கு என்ன நடந்தது என்றார்..?" அது யார்மீதும் குற்றம் சுமத்தாத தன்மை அடைந்ததால் ,நான் சாப்பிடாமல் பலவீனமாகி விட்டேன்"என்றது.. அது மட்டுமல்ல உடலில் என்ன தழும்பு என கேட்டார். உள்ளூரில் இருப்பவர்கள் என்னை அடித்து சந்தோசம் அடைகிறார்கள் என்றது.
★உன்னை யாரையும் தீண்ட வேண்டாம் என்றுதான் சொன்னேன் சீறவேண்டாம் என்று சொல்லவே இல்லையே, சீறாமல் இருப்பதுதான் ஆன்மீகம் என்றல்ல, நான் சொன்னதை தவறாக புரிந்து கொண்டு விட்டாய். நீ சீற வேண்டிய நேரத்தில் சீறாவிட்டால் உன்னை பாம்பு என்பதையே மறந்து விடுவார்கள் என கூறி அன்போடு தடவி விட்டு போனார் குரு.
★ஆம். நாமும் இந்த உலகில் சிலசமயம் சீறவேண்டிதான் உள்ளது.. ஆனால் அதில் விருப்பு வெறுப்பற்ற தன்மையில் சீறவேண்டும் இல்லாவிட்டால் நாம் மனிதர் என்பதையே மறந்து விடுவார்கள்.

Tuesday, 1 March 2016

ஜென் கதை:



ஒரு துறவியும் அவருடைய சீடரும் காட்டு வழியாக நடந்து போய்க் கொண்டிருந்தார்கள் . 

அந்த நேரத்தில் வெகுதூரத்தில் ஒரு புலி உருமுவதும் அது அவர்களை நோக்கி வருவதும் தெரிந்தது. 

உடனே சீடன் " குருவே புலி நம்மை நோக்கி வருவது போல் உள்ளது . 

அதனால் நாம் திரும்பி வேறு பாதை வழியாக போய் விடுவோம் " என்றான் . 

ஆனால் குரு சீடரின் வார்த்தையை கேட்கவில்லை . "புலி நம்மை ஒன்றும் செய்யாது " என்று சீடனிடம் சொல்லிவிட்டு அந்த இடத்திலேயே அமர்ந்து தியானம் செய்ய ஆரம்பித்து விட்டார் . 

சீடனையும் தியானம் செய்யுமாறு கூறினார் . குருவின் பேச்சை தட்ட முடியாத சீடனும் அந்த இடத்தில் அமர்ந்து தியானம் செய்ய ஆரம்பித்தான்.

வேகு நேரம் ஆனது தியானம் முடிந்து சீடன் கண்களை திறந்து பார்த்தான் . 

குருவின் பக்கத்தில் அந்த புலி அமைதியாக அமர்ந்திருந்தது.

சீடன் குரு விழித்ததும் அவரிடம் கேட்டான் எப்படி குருவே கோவமாக உருமிக்கொண்டு வந்த புலி அமைதியானது. 

"நாம் நம்மை சுற்றி எவ்விதமான அலையை பறப்புகிறோமோ நம்மிடம் வருபவர்களும் , நம்மை சுற்றி இருப்பவர்களும் அது போலவே மாறிவிடுவார்கள்" என்று கூறினார் அந்த குரு .

எனவே நம்மை சுற்றி நல்ல எண்ணங்களையே எண்ணுவோம் , மனதை அமைதியான நிலையிலேயே வைத்துக் கொள்வோம் .

நம்மைச் சுற்றி இருப்பவர்களும் நல்லவர்களாகவே இருப்பார்கள் .

Thursday, 25 February 2016

அழகான சின்ன கதை...!!!

ஒரு அழகான சிறுமி தன் கைகளில் இரண்டு ஆப்பிள் வைத்திருந்தாள்.. அங்கு வந்த அவளின் தாய் , நீ இரண்டு ஆப்பிள் வைத்திருக்கே ஒன்று எனக்கு கொடு என்றாள்.

தன் தாயை ஒரு வினாடி பார்த்த அந்த சிறுமி,

பின் உடனே ஒரு ஆப்பிளை கடித்து விட்டாள்..

பின் உடனே இரண்டாவது ஆப்பிளையும் கடித்து விட்டாள்..

தாயின் முகத்தில் இருந்த சிரிப்பு உறைந்து போனது. தன் ஏமாற்றத்தை வெளிப்படுத்த முடியாமல் தவித்தாள்.

உடனே அந்த சிறுமி, தாயிடம்
சொன்னாள். அம்மா இந்த ஆப்பிள் தான்
இனிப்பாக இருக்கு நீ எடுத்துக்க என்றாள்.

நட்புக்களே, நீங்கள் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். எவ்வளவு அனுபவமும் இருக்கலாம். அறிவு வீஸ்தீரமாகவும் இருக்கலாம். ஆனால் ஒருவரை பற்றி கணிப்பதை சற்று தள்ளிப்போட்டு கணிக்கவும்.

அடுத்தவருக்கு போதுமான அளவு
இடைவெளி கொடுத்து அவரை அறியவும்.

நீங்கள் அவரை பற்றிக்கொண்ட கண்ணோட்டம் தவறாகவும் இருக்கலாம்.

எதையும் மேலோட்டமாக பார்த்து கணிக்காமல் அவசரப்படாமல் ஆழ யோசித்து கணியுங்கள்..

மனக்கணக்கு தவறலாம்..மனிதரை பற்றிய கணக்கு தவறக்கூடாது.

Monday, 22 February 2016

உண்மையில் யார் ஞானி ? - ஸ்ரீ கிருஷ்ணர்

ஒரு சமயம் ஸ்ரீகிருஷ்ணர், அவரது சகோதரர் பலராமர், அர்ஜுனன் இம்மூவரும் ஒரு அடர்ந்த வனத்தின் வழியாகச் சென்றனர்.

இரவாகி விட்டது. மூவரும் ஒரிடத்தில் தங்கிவிட்டு விடிந்ததும் செல்லலாம் என்று எண்ணினர்.

வனத்தில் துஷ்ட மிருகங்கள் இருக்கும் என்பதால் மூவரும் ஒரு சேரத் தூங்கக்கூடாது என்றும்,

ஜாமத்திற்கு ஒருவராகத் காவல் இருக்க வேண்டும் என்றும் முடிவு செய்தனர்.

அதன்படி ஸ்ரீகிருஷ்ணரும், பலராமரும் தூங்கச்செல்ல, அர்ஜுனன் காவல் இருந்தான்.

அப்போது திடீரென புகை மண்டலம் சூழ்ந்தது. அதிலிருந்து ஒரு பயங்கர உருவம் வெளிப்பட்டது.

அகன்ற நாசியும், தூக்கிய பற்களும், முட்டைக் கண்களுமாக இருந்தது அவ்வுருவம்.

மரத்தடியில் இருவர் தூங்குவதையும், ஒருவன் காவல் இருப்பதையும் கண்ட அவ்வுருவம் தூங்கும் இருவரின் அருகில் சென்றது.

அதைக்கண்ட அர்ஜுனன் கோபத்துடன் அதைத் தடுத்தான்.

அப்போது அவ்வுருவம் அவ்விருவரையும் தான் கொல்லப்போவதாகவும் அதற்கு அர்ஜுனன் துணை செய்ய வேண்டும் என்றும் கேட்டது.

அதைக்கேட்டு கோபம் மிகக்கொண்டு அவ்வுருவத்தைத் தாக்கினான்.

அர்ஜுனனின் கோபம் அதிகமாக அதிகமாக அவ்வுருவத்தில் பலமும் அதன் வடிவமும் பெருகியது.

அர்ஜுனன் ஆக்ரோஷத்தோடு அதனுடன் போரிட அது பூதாகாரமாய் விளங்கியது. அர்ஜுனனை பலமாகத் தாக்கிவிட்டு மறைந்தது.

இரண்டாம் ஜாமம் தொடங்கவும் பலராமரை எழுப்பிவிட்டு அர்ஜூனன் தூங்கச் சென்றான்.

பலராமர் காவல் இருந்தார். அப்போது மீண்டும் அவ்வுருவம் அங்கு தோன்றி அர்ஜுனனிடம் கூறியதுபோல பலராமரிடமும் கூறியது.

அதைக்கேட்டு கோபம் கொண்ட பலராமர் அதனுடன் சண்டையிட்டார்.

அவ்வுருவம் அடிபணிவதாய் இல்லை. பலராமரின் கோபம் அதிகமாக அதிகமாக அவ்வுருவத்தின் பலமும் அதன் வடிவமும் பெரிதானது.

பின் பலராமரையும் பலமாகத் தாக்கிவிட்டு அவ்வுருவம் மறைந்துவிட்டது.

மூன்றாம் ஜாமம் தொடங்கவும் பலராமர் கிருஷ்ணரை காவலுக்கு எழுப்பிவிட்டு படுக்கச் சென்றார்.

அப்போதும் அப்பொல்லாத உருவம் தோன்றியது. அதைப்பார்த்த கிருஷ்ணர் கடகடவெனச் சிரித்தார்.

ஏன் சிரிக்கிறாய்? என்றது அவ்வுருவம். உனது தூக்கிய பற்களும், அழகான முட்டைக் கண்களையும் கண்டுதான், என்றார் சிரிப்பை அடக்க முடியாமல்.

அவர் தன்னைக் கேலி செய்வதைக் கண்டு ஆக்ரோஷத்துடன் அது சண்டை போட்டது.
கிருஷ்ணரோ புன்னகையை மாற்றாமலே, சண்டை போட்டார்.

கிருஷ்ணர் சிரிக்கச் சிரிக்க அவ்வுருவத்தின் பலமும் அதன் வடிவமும் குறைந்துகொண்டே வந்தது.

கடைசியில் அவ்வுருவம் சின்னஞ்சிறு புழுவாக மாறி தரையில் நெளிந்தது. ஸ்ரீகிருஷ்ணர் அப்புழுவை எடுத்து ஒரு துணியில் முடிந்து வைத்தார்.

பொழுது விடிந்தது. பலராமரும், அர்ஜுனனும் எழுந்தனர்.

இருவரும் இரவில் ஒரு பயங்கர உருவம் வந்ததும், அவர்களைத் தாக்கியதும் அவ்வுருவம் வளர்ந்து வளர்ந்து பெரிதாகியது பற்றியும் பேசினர்.

அப்போது கிருஷ்ணர் துணியில் முடிந்திருந்த புழுவைக் காட்டி, நீங்கள் இருவரும் சண்டை போட்ட உருவம் இதுதான்.

நீங்கள் அதனுடன் சண்டை போடும் போது கடுமையாகக் கோபப்பட்டீர்கள். உங்கள் கோபம் அதிகரிக்க அதிகரிக்க அதன் பலமும் வடிவமும் அதிகரித்தது.

நான் சிரித்துக்கொண்டே சண்டை போட்டதால் இதன் பலமும் வடிவமும் குறைந்து கொண்டே வந்து புழுவாக மாறிவிட்டது.

வம்பு சண்டைக்கு வருபவனை விட்டு புன்னகையோடு வெளியேறி விட்டால், அவன் புழுவுக்கு சமமாகி விடுவான்.

கோபத்தைக் குறைப்பவனே ஞானி, என்றார்.
எது? 
உலக அதிசயம்.

ஒரு பெரிய குழு, தாஜ் மஹாலை பார்க்க சென்று இருந்தார்கள், 
பார்த்து திரும்பி பஸ்ஸில் வரும் பொழுது தாஜ் மஹாலை விட அழகான ஒரு கட்டிடம் உலகில் வேறு எதுவுமே இல்லை என்பதை போல் பஸ்ஸில் பயணம் செய்தவர்கள் பேசி கொண்டார்கள். தாஜ் மஹால் மிக அழகான கட்டிடம் தான். அதை யாரும் மறுக்க முடியாது. ஆனால்? தாஜ் மஹால் மட்டும் தான் உலகில் அழகான கட்டிடமா. அதை விட அழகான ஒரு கட்டிடம் உலகில் வேறு எதுவும் இல்லையா?
ஏன் இல்லை. நிறையவே இருக்கிறது. சரி உலக அதிசயம் என்றால் என்ன? ஒன்று உருவான பின் அதே போல் ஒன்றை உருவாக்க முடியாது என்பது தான் உலக அதிசயம்.
நெல்லையப்பர் கோவிலில் கல் தூனை தட்டினால் ச, ரி, க, ம, ப, த, நி என்கிற ஏழு இசை ஸ்வரங்கள் ஒலிக்கும். கல்லுக்குள் 7 ஸ்வரங்களை வைத்தார்களே. அது உலக அதிசயம். திருப்பூரில் உள்ள குண்டடம் வடுக நாத பைரவர் கோவிலில். குழந்தை தாயின் வயிற்றில் இருக்கும் பொழுது. குழந்தை இந்த, இந்த மாதத்தில் இந்த, இந்த வடிவத்தில். இவ்ளவு விதமான இருக்கும் என்பதை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கல்லில் சிற்ப்பங்களாக வடித்து வைத்துள்ளார்கள் என் முன்னோர்கள். அது உலக அதிசயம். அன்னியர் படை எடுப்பின் பொழுது கூட. இந்த அதிசய சிற்ப்பங்களை அவர்களால் சிதைக்க முடியவில்லை. இன்றும் நிறைய கோவில்களில் சூரிய ஒளி குறிப்பிட்ட ஒரு தேதி, நேரத்தில் மாலை போல் வந்து சிவலிங்கத்தின் மீது விழும். அப்ப எவ்ளவு துல்லியமாக செய்து ஆலயங்களை கட்டி இருப்பார்கள் என்று பாருங்கள். சில கோவில்களில் தினமுமே சூரிய ஒளி சிவலிங்கத்தின் மீது மாலை போல் வந்து விழும். வட சென்னையில் உள்ள வியாசர் பாடி ரவீஸ்வரர் சிவன் கோவிலில் 3 வேளையும் சூரிய ஒளி சிவலிங்கத்தின் மீது மாலை போல் வந்து விழும். இந்த கோவிலில் உள்ள சிவலிங்கம் எவ்ளவு ஆண்டுகள் பழமையான லிங்கம் தெரியுமா? ஐயாயிரம் ஆண்டுகள். இது உலக அதிசயம். மதுரை மீனாக்ஷி அம்மன் கோவில், தஞ்சை பெரிய கோவில் சிற்ப்ப, கட்டிட வேலைபாடுகளில் உள்ள அதிசயங்களை பற்றி சொல்வதென்றால். அதற்கு எனக்கு இந்த ஒரு பிறவி பத்தாது.
ஓசோன் 20 ம் நூற்றாண்டில் கண்டு பிடிக்கப்பட்ட படலம். 700 ஆண்டுகளுக்கு முன்பே மதுரை மீனாக்ஷி அம்மன் கோவிலில் ஓசோன் படலத்தின் படம், அதன் முக்கியத்துவம், அதை நாம் எவ்வாறு பாதுக்காக்க வேண்டும் அனைத்தும் அங்கே வைக்கப்பட்டு உள்ளது. அது உலக அதிசயம். யாழி என்கிற மிருகத்தின் சிலை. பல பழங்கால கோவில்களில் இருக்கும். டைனோசர் போல். அதுவும் உலகில் வாழ்ந்து அழிந்த மிருகம் என்று சொல்கிறார்கள். சில பழம்கால கோவில்களில் உள்ள யாழி சிலையின் வாயில் ஒரு உருண்டை இருக்கும். அந்த உருண்டையை நாம் உருட்டலாம். ஆனால் ஆயிரம் குன்பூ வீரர்கள் ஒன்று சேர்ந்து முயற்சித்தாலும். யாழி வாயில் உள்ள உருண்டையை வெளியே உருவ முடியாது. அது உலக அதிசயம்.
இன்று தாஜ் மஹாலை விட மிகப்பெரிய மார்பிள் கட்டிடங்கள் உலகில் உருவாகி விட்டது. இன்று ஒரு வல்லரசு நாடு நினைத்தால். ஆயிரம் தாஜ் மஹாலை உருவாக்க முடியும். ஆனால் கல்லுக்குள் 7 ஸ்வரங்களை வைக்கும் அந்த வித்தையை. எந்த வல்லரசாலும் செய்ய முடியாது. வாயில் உள்ள உருண்டையை உருட்டலாம். ஆனால் உருவ முடியாது. இந்த வித்தையை இன்று எந்த வல்லரசாலும் செய்ய முடியாது. மிகப்பெரிய பிரும்மாண்ட கற் கோவில்களை. அழகிய கலை வேலைபாடுகளோடு உருவாக்குவது. இதை எந்த உலக வல்லரசாலும் செய்ய முடியாதது. உலகில் கிரேக்க, எகிப்து போன்ற பழம்கால நாகரீகங்களுக்கு முன்பே. ஸ்கேன் கருவி இல்லாமல் வயிற்றில் உள்ள குழந்தையை படம் பிடித்ததில் இருந்து. தொலைநோக்கி இல்லாது உலகம் உருண்டை என்பது முதல் ஓசோன் படலம் வரை. முதன் முதலில் உலகிற்கு சொன்னது நமது பாரத தேச முன்னோர்கள். நமது முன்னோர்களின் அறிவு உலக அதிசயம் அல்லவா. இதை போல் இன்னொன்றை இனி உருவாக்க முடியாது என்று இருப்பவையே உலக அதிசயங்கள்.
ஆக தாஜ் மஹால் மிக அழகான கட்டிடம் அதில் சந்தேகம் இல்லை. ஆனால்? அது ஒன்றும் அதிசயம் கிடையாது. ஷாஜகானுக்கு 600 ஆண்டுகளுக்கு முன்பே. ராணி உதையமதி தனது கணவர் பீம் தேவுக்காக தாஜ் மஹாலை விட அழகான, பிரம்மாண்டமான ஒரு நினைவு சின்னத்தை உருவாக்கியது உங்களில் எவ்ளவு? பேருக்கு தெரியும். அந்த நினைவு சின்னத்தின் பெயர் என்ன? தெரியுமா. ராணி கி வாவ். ஹிந்தியில் வாவ் என்றால் கிணறு என்று பொருள். கிணற்று வடிவத்தில் உள்ள கட்டிடங்கள் உலகில் மிக, மிக அபூர்வம். இந்தியாவில் கிணற்று வடிவில் உள்ள மிக பிரும்மாண்டமான அரண்மனை ராணி கி வாவ். இது எந்த அளவு பிரும்மாண்டமான கட்டிடம் என்பதற்கு ஒரு சிறிய உதாரணம். இந்த கட்டிடத்தின் உள். 30 கிலோ மீட்டர் நீள சுரங்க பாதை. ஆங்கிலத்தில் Tunnel என்று சொல்வார்கள். இந்த ராணி கி வாவ் இன்றைய குஜராத் மாநிலத்தில் சித்பூர் என்கிற ஊருக்கு அருகில் உள்ள பதான் pathan என்கிற ஊரில் உள்ளது.
நம் நாட்டில் எத்தனையோ அதிசயங்கள் இன்னும் உண்டு.
நட்புடன்
படித்ததில் பிடித்தது

காட்டு வழியில் தன் சீடனுடன் நடந்து கொண்டு இருந்தார் ஜென் குரு. சீடனிடம் அங்கிருந்த ஒரு செடியைக் காட்டினார். “இந்தச் செடியைப் பற்றிச் சொல்!” “இதன் பெயர் பல்லடோனா. இதன் இலைகள் விஷம் மிக்கவை. உயிரைப் பறிக்கக்கூடியவை!” 

“இலைகள் வேடிக்கைப் பார்த்தால் ஆபத்தில்லை. சுவைத்தால்தான் உயிர் போகும். 
பிரச்சனைகளும் அப்படித்தான். தேவையான கவனம் கொடுத்தால் போதும். ஆபத்தின்றி தீர்ந்துபோகும். தேவையற்ற முக்கியத்துவம் கொடுத்து, இழுத்து மண்டையில் போட்டுக் கொண்டால், குடைந்து உயிரை எடுத்துவிடும்” என்றார் குரு. 

உங்கள் பிரச்சனை, குடும்பம் அல்ல; நிறுவனம் அல்ல. பிரச்சனையே நீங்கள்தான். வெளியே இருப்பதைச் சமாளிப்பதாக நினைத்து, உங்களை நீங்கள் மிகவும் திருகிக் கொண்டு விடுகிறீர்கள்.

கண்களை மூடிக்கொண்டு உங்கள் உள்ளங்கைகளை மேல் முகமாகத் திருப்பி வையுங்கள். உங்கள் மூச்சைக் கவனியுங்கள். அதே கைகளை மட்டும், கீழ்முகமாகத் திருப்பி வைத்து மூச்சைக் கவனியுங்கள். இப்போது, மூச்சு வேறுவிதமாக இயங்கும். உடலுறுப்புகளை எந்தவிதத்தில் வைத்திருக்கிறீர்கள் என்பதைப் பொறுத்து, உங்கள் உயிர்ச் சக்தியின் ஓட்டம் மாறுகிறது. இது பற்றிய கவனம் இல்லாமல், கோபத்தில் கைகளை இப்படியும் அப்படியுமாக வீசிக் கூச்சலிடும்போது, உயிர்ச் சக்தி எத்தனைக் குழப்பத்துக்கு உள்ளாகும் என்று யோசியுங்கள். இப்படி, கவனமின்றி எவ்வளவு தூரம் உங்கள் சக்தியை நீங்கள் வீணடித்துக் கொண்டு இருக்கிறீர்கள்? நீங்கள் சரியானபடி இயங்கவில்லை என்றால், உங்களுக்கு எதுவும் சரியாக நடக்காது. 

கேள்வி அப்படியில்லை குருஜி! பத்து வருடங்களுக்கு முன், என்னால் சுலபமாகச் சமாளிக்க முடிந்தது. இப்போதுதான் ரொம்பக் கஷ்டமாக இருக்கிறது!

சத்குரு: 

பத்து வருடங்களில் உங்கள் பிரச்சனைகளை நீங்கள் பல மடங்கு பெருக்கி வைத்திருக்கிறீர்கள் என்று அர்த்தம். பிரச்சனைகள் கூடிப்போவதுதான் வளர்ச்சியின் அடையாளம் என்று தப்பாக அர்த்தம் செய்து கொண்டு விட்டீர்கள். குடும்ப டென்ஷன், நிறுவன டென்ஷன், போக்குவரத்து டென்ஷன் என ஒவ்வொன்றும் டென்ஷன் ஆகிப்போனால், இந்த பூமியில் நீங்கள் வாழத் தகுதியில்லாதவர் ஆகிவிடுவீர்கள். உங்கள் உடலையும், மனதையும் கூட கையாளத் தெரியவில்லையே, குடும்பத்தையும், நிறுவனத்தையும் எப்படிக் கையாள்வீர்கள்? உங்களுக்கு எல்லாம் தெரியும் என்ற இறுமாப்பை விட்டு, எதையும் ஆழ்ந்த கவனத்துடன் அணுகிப் பாருங்கள். 

சங்கரன்பிள்ளை இறக்குமதி செய்யப்பட்ட ஒரு காபி இயந்திரத்துடன் போராடிக் கொண்டு இருப்பதை, அவர் வீட்டில் வேலை செய்யும் பெண்மணி கவனித்தாள். “இந்த இயந்திரத்தை எப்படிப் பொருத்துவது என்று பற்றி ஃப்ரெஞ்ச் மொழியில் குறிப்பு அச்சிடப்பட்டு இருக்கிறது. அதன்படி செய்து பார்த்து விட்டேன். பொருத்த முடியவில்லை. இயந்திரத்தில் ஏதோ கோளாறு என்று நினைக்கிறேன்” என்றார் சங்கரன் பிள்ளை. பணிப்பெண் பக்கத்தில் வந்தாள், ஒரே முயற்சியில், அதே இயந்திரத்தை மிகச் சுலபமாகப் பொருத்திவிட்டாள்.

“எப்படி?” என்றார், சங்கரன் பிள்ளை ஆச்சர்யத்துடன்.

“எனக்கு எழுதப் படிக்கத் தெரியாது ஐயா. அதனால், குழப்பிக் கொள்ளவில்லை” என்றாள் அவள்.

புரிகிறதா? உங்களைச் சுற்றி என்ன நடந்தாலும், அங்கே நீங்கள் ஒரு பிரச்சனையாகிவிடாத அளவுக்கு ஒரு சூழ்நிலையை உருவாக்கினால் போதும்… எதுவுமே டென்ஷனாக இருக்காது. உங்களை நீங்கள் பெரிதாக நினைத்துக் கொள்ளாமல், நீங்கள் நினைப்பதுதான் சரி என்ற அகங்காரத்துடன் எதையும் அணுகாமல் இருந்தால், எந்தப் பிரச்சனை உங்களைக் கட்டிப்போட முடியும்? நுணுக்கம் புரியாதவரைதான் எதுவும் இயலாததாகத் தோன்றும்.

பிரச்சனைகளின் விளைநிலம் உங்கள் குடும்பமோ, நிறுவனமோ அல்ல. உங்கள் மனம்தான். அற்புதக் கருவியாக இயங்க வேண்டியது அவலமான கருவியாகிவிட்டது. வேண்டியதை வழங்க வேண்டிய சாதனம், வேதனைகளை வழங்கும் சாதனமாகிவிட்டது. 

என்னையே எடுத்துக் கொள்ளுங்கள். ஈஷா இயக்கத்தில், உலகெங்கும் பத்து லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் தன்னார்வத் தொண்டர்களாகச் செயல்படுகிறார்கள். அவர்கள் வெவ்வேறு கலாச்சாரப் பின்னணியில் வளர்ந்தவர்கள். வெவ்வேறு நம்பிக்கைகளை வளர்த்து, வாழ்ந்தவர்கள். அவர்களின் பெரும்பாலானவர்கள் தாங்கள் பொறுப்பேற்று இருக்கும் வேலைகளுக்கு எனத் தனிப் பயிற்சி எதுவும் எடுத்துக் கொள்ளாதவர்கள். இதைப் புரிந்து கொள்ளாமல், எடுத்தற்கெல்லாம் நான் டென்ஷனாகிக் கொண்டு இருந்தால், நான் எதிர்பார்க்கும் எந்த வேலை நடக்கும்? கோபத்தால் அத்தனை லட்சம் பேரை நான் எப்படிக் கையாள முடியும்? நான் அவர்களுக்கு மகனாக, தகப்பனாக, குருவாக, சேவகனாக மனநல மருத்துவனாக எவ்வளவோ தளங்களில் இயஙக வேண்டி இருக்கிறது. அப்படிச் செய்யத் தயாராக இருந்தால்தான், நீங்களும்… குடும்பத்துக்கும், நிறுவனத்துக்கும் தலைமைப் பொறுப்பேற்க முடியும். 

கேள்வி : டென்ஷனிலிருந்து மீள சுலபமான வழி என்ன? 

சத்குரு: உங்களைச் சுற்றி என்ன நடந்தாலும், அங்கே நீங்கள் ஒரு பிரச்சனையாகிவிடாத அளவுக்கு ஒரு சூழ்நிலையை உருவாக்கினால் போதும்… எதுவுமே டென்ஷனாக இருக்காது. 

ரிச்சர்டு கவுலி என்ற பிரபல மருத்துவரிடம் ஒருவன் வந்தான். “டாக்டர், எனக்கு 32 வயதாகிறது. கட்டை விரல் சூப்பும் பழக்கத்தை இன்னமும் விட முடியாமல் தவிக்கிறேன்” என்று வெகு கூச்சத்துடன் சொன்னான்.

“இதில் கவலைப்பட ஒன்றுமில்லை. ஆனால், எத்தனை வருடங்களுக்குதான் அதே கட்டை விரலைச் சூப்புவாய்? இன்றிலிருந்து கவனமாய் வேறு விரலைப் பயன்படுத்து” என்று அறிவுறுத்தி அனுப்பினார் ரிச்சர்டு கவுலி.

ஒரே வாரத்தில் அவன் மறுபடி வந்தான். “முப்பது வருடமாகத் தவிர்க்க முடியாததாக இருந்த பழக்கத்திலிருந்து ஆறே நாளில் முற்றிலும் விடுபட்டுவிட்டேன். எப்படி டாக்டர்?” என்றான் ஆச்சர்யத்துடன். 

“ஒரு விஷயத்தைப் பழக்கதோஷத்தில் செய்யாமல், ஒவ்வொரு முறையும் அதுபற்றிப் புதிதாக முடிவெடுக்க வேண்டி வந்தால், அதைக் கவனத்துடன் அணுகுவோம். தேவையற்ற பழக்கம் தானாக உதிர்ந்துவிடும்” என்றார் ரிச்சர்டு கவுலி.

கோபமும், டென்ஷனும் உங்கள் வாடிக்கையாகி இருந்தால், இனி, ஒவ்வொரு முறையும் அது பற்றிய கவனத்துடன் அணுகிப் பாருங்கள். விஷம் உதிரும். அமுதம் நிலைக்கும்!

சத்குரு

Sunday, 21 February 2016

ஒரு ஊரில் ஒரு கோடீஸ்வரன் இருந்தான். அவனுக்குக் கடுமையான தலைவலி ஏற்பட்டது. பல ஊர்களிலிருந்து மிகப் பெரிய வைத்தியர்கள் வந்து பார்த்தும், வண்டி வண்டியாக மருந்துகள் சாப்பிட்டும் அந்தத் தலைவலி குணமாகவில்லை.

ஒருநாள் அந்த ஊருக்கு ஒரு சன்யாசி வந்தார். அவர் பணக்காரனை வந்து பார்த்தார். பார்த்துவிட்டு, அவருக்கு ஏற்பட்ட தலைவலிக்குக் கண்ணில் இருக்கும் ஒரு நோயே காரணம் என்று கூறினார். அந்தக் கண்ணைக் குணப்படுத்த ஒரே ஒரு வழிதான்.

அந்தப் பணக்காரன் பச்சை நிறத்தைத் தவிர வேறெதையும் பார்க்கக்கூடாது என்று கூறிவிட்டுப் போய்விட்டார்.

பணக்காரன் முதலில் தன் வீட்டில் இருக்கும் எல்லாவற்றையும் பச்சையாக மாற்றினான். தலைவலி குணமாகி விட்டது. சன்னியாசி கூறியது சரிதான். உடம்பு சரியாகவே வீட்டைவிட்டு வெளியே போகத் தொடங்கினான். வெளியே போனால், இயற்கை எல்லா வண்ணங்களையும் அள்ளித் தெளித்திருந்தது. ஆனால், அவற்றைத்தான் அவன் பார்க்கக்கூடாதே!

நிறையப் பச்சைப் பெயிண்டையும் பிரஷ்ஷையும் கொடுத்து சில ஆட்களை நியமித்தான். அவன் போகும் வழியில் இருக்கும் ஆடு, மாடு, மனிதர், குடிசை, வண்டி, மேசை, நாற்காலி எல்லாவற்றுக்கும் பச்சை நிறத்தை அடிப்பது அவர்களுடைய வேலை.

அவர்களும் முதலாளி சொன்னபடியே செய்து வந்தார்கள். சில மாதம் கழித்து மீண்டும் சன்னியாசி அதே ஊருக்கு வந்தார். வேலையாட்கள் அவரைத் தடுத்து நிறுத்தி, அவர் மீதும் பச்சை வண்ணம் அடிக்கப் போனார்கள்.

சன்னியாசிக்கு ஆச்சரியமாகிவிட்டது. காரணம் கேட்டார். அவர்கள் ‘தங்கள் முதலாளியின் கட்டளை இது’ என்று கூறினார்கள்.

சன்னியாசி அதற்கு, “என்னை உங்கள் முதலாளியிடம் அழைத்துப் போங்கள்” என்றார். பணக்காரனுக்குத் தன் நோயைக் குணப்படுத்திய சன்னியாசி மீண்டும் வந்ததைக் கண்டு ஒரே மகிழ்ச்சி. வணங்கி அவரை உபசரித்தான்.

“இந்த ஊரில் எல்லாவற்றுக்கும் ஏன் பச்சைப் பெயிண்ட் அடிக்கிறீர்கள்?” என்று சன்னியாசி கேட்டார்.

“ஐயா, நீங்கள் சொன்னபடிதான் நான் செய்கிறேன்” என்றான் அவன் மிகப்பணிவோடு. “நான் என்ன சொன்னேன்?” என்றார் சன்னியாசி. “பச்சைநிறத்தைத் தவிர வேறெதையும் நான் பார்க்கக்கூடாது என்று கூறினீர்களே ஐயா” என்றான்.

“மகனே! நீ லட்ச லட்சமாகப் பணத்தைச் செலவழித்திருக்க வேண்டாம்.  ஒரு நூறு ரூபாய் கொடுத்து பச்சைக் கண்ணாடி😎 வாங்கியிருந்தால், உன்னைச் சுற்றியிருக்கும் பொருள்களெல்லாம் பிழைத்திருக்கும். உன் பணமும் வீணாகி இராது. உன்னால் இந்த உலகம் முழுமைக்கும் பச்சைப் பெயிண்ட் அடிக்கமுடியுமா?” என்று கேட்டார் சன்னியாசி.

நம்மில் பலரும் இந்தக் கதையில் வரும் பணக்காரனைப் போலத்தான் இருக்கிறோம். நம்மைத் திருத்தி அமைத்துக் கொள்வதற்கு பதிலாக, உலகத்தை எப்படியாவது மாற்றியமைத்து விடுவது என்று மிகவும் முயற்சிக்கிறோம். அது சாத்தியமல்ல. மிகுந்த காலமும், உழைப்பும் விரயமான பிறகு தான் ‘திருந்த வேண்டியது நாம்தான்’ என்பது புரிகிறது💚💚💚

....#மனம்
......#திறந்து
........#வணக்கம்...

   #நடிகர்விவேக்
     #ஓர்தந்தையாக
        #பேசியகண்ணீர்துளிகள்..
                              ( #முத்துமுத்து )
‘மனம்’ இணையதள பத்திரிகைக்காக என்னை மனம்திறக்கச் சொல்கிறார்கள். அதுவும் சமீபத்தில் மறைந்த... என் மனமெல்லாம் நிறைந்த என் மகன் பற்றி..!

இந்த அமிலச்சோதனையை நான் எவ்வாறு கையாள்வேன்..?

அவனை நினைத்தாலே நெஞ்சு நெகிழ்கிறது. கண்கள் தளும்புகிறது. எழுதும் பேனா அழுது தீர்ந்துவிடுகிறது...

இதயம் சோர்ந்துவிடுகிறது. அடுக்கடுக்காக அவன் நினைவுகள் கண்ணீர்மேகமாய் என்னைச் சூழ்ந்துகொள்கின்றன...

பிரசன்ன குமார் - என் பிரசன்னா. 13 வருடங்கள் ஆயிற்று; 14 -ம் வருட வாழ்வு போயிற்று. அக்டோபர் 23 -ல் பிறந்தவன். அக்டோபர் 29 -ல் விடைபெற்றான்...

14 வருடங்களின் வருடல் இனி என் நினைவுப்பரப்பில் என்றும் கதறல். இன்னும் கொஞ்சம் அதிகம் பழகி இருக்கலாமோ? இத்தனைக்கும் அவன் நிறையப் பேசுபவன் அல்ல...

அவன், அவனது பியானோ, அமர்சித்ரகதா, வீடியோ கேம்ஸ், கால்பந்து, குறிப்பிட்ட சில நண்பர்கள் என்ற ஒரு சிறிய வட்டம் அவன் உலகம்...

எப்போதாவது பேசுவான். கேமரா, பேட்டி என்றால் கூசுவான். அவனுக்கு எல்லாமே அவன் அம்மாதான்...

அந்த வளரிளம்பருவக் குழந்தைக்கு, அம்மாமேல் கால்போட்டுக்கொண்டால்தான் தூக்கம் வரும். 

வாலைக் குழைத்து வரும் நாய்தான் - அது மனிதருக்கு தோழமை பாப்பா!

தெருவில் திரியும் நாய்க்குட்டியை வீட்டுக்கு எடுத்துவந்து, ‘இதை வளர்ப்போம் டாடி!’ எனும்போது கண்கள் மிளிர்ந்து நிற்பான்...

அவனுடன் நான் பேசிய பேச்சுகள் மிக மிகக் குறைவு. காரணம் அவன் பதில்கள் ‘ஓ.கே.’, ‘உம்’, ‘சரி’, ‘மாட்டேன்’ என ஒற்றை வார்த்தையில் முடிந்துவிடும்...

ஃபோட்டோவுக்கு நிற்க மாட்டான்; கட்டாயப்படுத்தி நிற்கவைத்தாலும் முகத்தை அஷ்டகோணலாக்கி... அந்த ஃபோட்டோவை பயன்படுத்த முடியாமல் செய்துவிடுவான்...

அவனுக்குத் தெரியாமல், அவன் புத்தகம் படிக்கும்போது, பியானோ வாசிக்கும்போது, வீடியோ கேம்ஸ் விளையாடும்போது, தூங்கும்போது என எடுத்த ஃபோட்டோக்கள்தான் என் ஃபோனில் உள்ளன இப்போது...

அவனுக்கு ஒரு நல்ல நண்பனாக இருக்க நான் போராடிக்கொண்டிருந்தேன். அவனைத் திட்டியதில்லை, அடித்ததில்லை, ஏன், அவனைக் கொஞ்சியதும் இல்லை...

காரணம் அவன் விடுவதில்லை. அவன் அம்மாவே அவனை முத்தமிட முடியாது. பிடிக்காது. விடமாட்டான். அது என்ன கூச்சமோ..?

தன்னைச் சுருக்கிக்கொண்டு வாழ்ந்தாலும் அவனிடம் ஏதோ ஒரு புனிதம் இருந்தது. அவனை எல்லோருக்கும் பிடித்துப்போனது...

இளையராஜா, அவனை அழைத்து மடியில் அமர்த்தி ஃபோட்டோ எடுக்கச் சொல்வார். ஏ.ஆர்.ரஹ்மான் அவனைப் பியானோ அருகில் நிற்கவைத்து ஃபோட்டோ எடுப்பார். ‘இவனுக்கு 18 வயசு வரும்போது முழு இசைக்கலைஞன் ஆகிவிடுவான்’ என்பார்(முந்திக்கொண்டானே!)...

ஹாலஸ் தனது ஸ்டுடியோவைச் சுற்றிக் காட்டுவார். தன்னோடு அணைத்து ஃபோட்டோ எடுக்கச் சொல்வார். அவர் மகன் நிக்கோலஸும் இவனும் அப்துல் சத்தார் மாஸ்டரிடம் பியானோ கற்றுக்கொண்டிருந்தார்கள்...

அது ஒரு காலம். ஷுட்டிங் இல்லாத நாட்களில் நானே அவனை பியானோ கிளாஸுக்குக் கூட்டிச்செல்வேன்...

டீக்கடையில் பட்டர் பிஸ்கெட்டும், டீயும் வாங்கிக் கொடுப்பேன். அவன் அம்மாவுடன் சென்றால், இந்தச் சின்னச் சின்ன சந்தோஷங்கள் கிடைக்காது என்பான்...

இந்த வருடம் ஏழாவது கிரேடு பியானோ எக்ஸாம் எழுத வேண்டியது. எட்டாவது கிரேடுடன் நிறைவடைகிறது. இப்போது அந்த பியானோ, வாசித்தவன் எங்கே போனான் என்று யோசித்துக் கிடக்கிறது...

அவன் விளையாடிய ஃபுட்பால் உதைக்க ஆள் இல்லாமல் ஹாலின் மூலையில் உறைந்து கிடக்கிறது. அவன் விளையாடிய வீடியோ கேம்ஸ், வீணே கிடக்கிறது...

தூசி படிந்த அவன் புத்தகங்கள், அயர்ன் செய்துவைத்த யூனிஃபார்ம்கள், பிடித்து வாங்கிய ஷூக்கள்...

என வீட்டின் ஒவ்வொரு சதுர அடியிலும் கசிந்துகொண்டிருக்கின்றன அவன் ஞாபகங்கள். தோட்டத்தில் உலவினாலும் தொடர்ந்து வரும் சோகங்கள்...

இதுவரை ‘புத்திர சோகம்’ என்பது ஒரு வார்த்தைத் தொடர் எனக்கு. இப்போதுதான் புரிகிறது அது வாழ்வைச் சிதைக்கும் பேரிடர்...

கையில் முகர்ந்த வாழ்வெனும் வசந்தத்தை விரலிடுக்கில் ஒழுகவிட்டுவிட்டேன். இழந்த பின்னர் இன்னும் அடர்த்தியாய் மனதில் இறங்குகிறது மகனின் அருமை. அவன் விட்டுச்சென்ற வெறுமை...

அருமைப் பெற்றோரே... உங்களுக்கு சில வார்த்தைகள்..!

குழந்தை வளர்ப்பு ஒரு கடமை அல்ல. அது ஒரு கலை. கலை மட்டுமல்ல, அது அறிவியலும்கூட...

குழந்தைகள் உங்களால் வரவில்லை. உங்கள் மூலம் வந்தார்கள். அவர்களிடம் நன்றியோடு இருங்கள்...

அவர்கள் உங்கள் வாழ்வின் ஆதாரம். உங்கள் கனவுகளை அவர்களிடம் திணிக்காதீர்கள். அவர்களது அபிலாஷைகள் என்னவென்று கண்டுபிடியுங்கள்..

உங்கள் நிறைவேறா கனவுகளை உங்கள் குழந்தைகளுக்குள் வலுக்காட்டாயமாக விதைக்க வேண்டாம்...

கார் மெக்கானிஸத்தில் காதல்கொண்ட மகனை டாக்டர் ஆக்கப் போராடாதீர்கள். ஆட்டோமொபைல் என்ஜினீயரிங்க்குப் பச்சைக்கொடி காட்டி, தொடர்ந்து பக்கபலமாக இருங்கள்...

அவன் வாழ்வு ஒரு மகிழ்ச்சிப் பூங்கா ஆவதைப் பார்ப்பீர்கள். தோனியைப் பார்த்துவிட்டு, பையனை கிரிக்கெட் கோச்சிங் அனுப்பாதீர்கள்....

அவனுக்கு ஓவியத்தில் விருப்பம் இருக்கலாம். டென்னிஸில் காதல்கொண்ட மகளை பரதநாட்டியத்துக்கு அனுப்பி டார்ச்சர் செய்ய வேண்டாம்...

அவர்கள் ஆன்மிகமும் படிக்கட்டும்; அனிருத்தும் கேட்கட்டும். வீட்டுக்குள் அடைத்து, ஏ.சி. ரூமில் டிவி பார்த்துக்கொண்டே சிப்ஸ் கொறிக்க வைக்க வேண்டாம்...

தெருவில் இறங்கி, புழுதியில் விளையாடி, வேர்த்து விறுவிறுத்து வீடுவந்து சேரட்டும். அவர்களுக்கு கம்யூனிட்டி தெரிகிறதோ இல்லையோ இம்யூனிட்டி அதிகரிக்கும்...

அவர்கள் எல்லாவற்றையும் பார்க்கட்டும், கண்கள் விசாலமானால், இதயம் விசாலம் ஆகும்...

பெண் குழந்தைகளை வீரத்தோடு வளர்த்தெடுங்கள். எதிர்காலம் புதிர்காலமாகும் சூழலில், அவர்கள் எதிர்த்துப் போராட வேண்டியிருக்கலாம்...

‘ரேப்பிஸ்ட்’களுக்கு உதவித்தொகையும், தையல் மெஷினும் வழங்கும் ஜனநாயகம் இது. பெண்கள், அவர்களே தங்களைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்...

பாரதியாரையும், விவேகானந்தரையும் உங்கள் வீட்டுச் சின்னஞ் சிறு மனிதர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
மனம் வளம் பெறும்...

மஞ்சள், வேம்பு, துளசி, நிலவேம்பு... இவை உயிர், உடல் காக்கும் நம் மண்ணின் மூலிகைகள்...

அதை நம் பாட்டி கொடுத்தபோது வாங்கிக் குடித்தோம். நம் பிள்ளைகளுக்குக் கொடுக்க மறந்தோம். ஃபார்மஸியில் மாத்திரைகள் வாங்கி விழுங்கினோம்..

இனியாவது புராதானங்களை மீட்டெடுப்போம்...
குழந்தைகளுக்கு ஆரோக்கியமூட்டுவோம், அறிவூட்டுவோம், அன்பூட்டுவோம்!

#பின்குறிப்பு: எப்போதுமே முத்தமிட அனுமதிக்காத என் மகன்... ஒரு முறை அனுமதித்தான்..

அவன் இறந்த பின், எரியூட்ட அனுப்பும் முன், அவன் நெற்றியில் ஒருமுறை முத்தமிட..!

ஒவ்வொரு சனிக்கிழமையும் சாயி பாபா கோவிலில் அன்னதானம் செய்து வந்தோம். வருகிறோம்...

அந்த அன்னதானத்தில் சிப்ஸ் கொடுக்குறது என்னோட பையன் பிரசன்னா. அவன் ஹாஸ்பிட்டல்ல இருக்கும்போது கூட அன்னதானம் பண்றத நிறுத்தல...

ரொம்ப விரும்பி அவன் அதை செய்றதைப் பாத்திருக்கேன். அதனால அவன் திரும்பி வர்ற வரைக்கும் அவனோட பணியை நானே  செய்யலாம்னு நெனச்சு, நான்தான் அப்போ சிப்ஸ் கொடுத்துட்டு இருந்தேன்...

எப்பொழுதும் நானே கொடுக்கும்படி ஆகுமென்று நினைக்கவில்லை...

வீட்டுல எப்பவாச்சும் இரவு கட்டில்ல உக்காந்து நாங்க ரெண்டு பெரும் தலையணை சண்டை போடுறது உண்டு...

நான் ஃப்ரீயா இருக்கும்போது என்கூட சண்டை போட அவனும், அவன் கூட சண்டை போட நானும் விரும்புவோம்...

அவன் இறுதி நாட்களை எடுத்துக்கொண்ட மருத்துவமனை  கட்டில், ரிமோட்டின் உதவியால் மேலும் கீழும் அசையுற மாதிரி இருந்துச்சு...

அந்த சூழ்நிலையிலும் அந்தக் கட்டிலை ரிமோட் ஊஞ்சலா மாத்தி விளையாடிட்டு இருந்தோம்.  அந்த கட்டில் இப்போது அவனைத்தேடும்...

என் வீட்டுக் கட்டிலும், தலையணையும் எப்போதும் அவனைத் தேடும்...

“The Good, The Bad and The Ugly” என்றொரு இத்தாலிய சினிமா...

நான் வீட்டில் இருக்கும்போது யார் என்னை தொலைபேசியில் அழைத்தாலும் எனது பதில், பிரசன்னாவுடன்  “The Good, The Bad and The Ugly” படம் பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்பதுதான்...

எத்தனை முறைதான் அந்தப் படத்தைப் பாப்பீங்க என்று அவர்கள் கேட்கும் கேள்வியின் பதிலை இப்போதுச் சொல்கிறேன்...

இசையமைப்பாளர் “என்னியோ மொரிக்கோன்” இசையமைத்த அந்தப் படத்தின் பின்னணி இசைக்காகவே அத்தனை முறைப் பார்ப்பான் என் பிரசன்னா. அவனோடு சேர்ந்து நானும்...

இனி யாருடன் பார்ப்பேன்? யாருக்குப் புரியும் அவனது ரசனையும், அவன் ரசித்த அந்த இசையும்...

நடிகன் என்ற கர்வம் சிறிதேனும் என்னிடம் அவ்வப்போது வெளிப்பட்டு விடும். நடிகனின் மகன் என்ற கர்வம் ஒருபோதும் அவனிடம் வெளிப்பட்டது கிடையாது...

எங்கள் ஏரியா சிறுவர்களுடனேயே தொடர்ந்து விளையாடும் பழக்கம் உள்ள அவனுக்கு நண்பர்களும் அவர்களே...

அடிக்கடி என்னிடம் பணம் வாங்கிக் கொள்வான். வாங்கும் பணத்தை என்ன செய்கிறான் என்று விசாரித்தபோது...

இருபது ரூபாய்க்கு கிடைக்கும் டிவிடி - க்களை வாங்கி அதில் வீடியோ கேம்ஸ் ஏற்றி அவன் நண்பர்களுக்கு கொடுக்கிறான் என்று தெரிந்து சந்தோஷப்பட்டேன். சந்தோஷப்படுகிறேன்...

நேரத்திற்கு தண்ணீர் குடிக்கும் பழக்கம் இல்லை எனக்கு. எப்போதாவதுதான் பேசும் அவன், அடிக்கடி பேசும் வார்த்தை...
“அப்பா! தண்ணி குடிச்சீங்களா?”...

என் கைபேசியில் ஒரு அப்ளிகேஷன் வைத்திருக்கிறேன்...
நேரத்திற்கு தண்ணீர் குடிக்கச் சொல்லி அலெர்ட் செய்யும் என்னை அது...

இப்போது அந்த அப்ளிகேஷன் “Please drink water Daddy by prasanna” என்று என்னை அலெர்ட் செய்கிறது....

#மனம்திறந்து : #கடைசிமுத்தம்!

- #நடிகர்விவேக்