Wednesday, 2 March 2016

பாசம்
********
ஒரு ஊரில் ஒரு தம்பதியினர் சந்தோஷமாக வாழ்ந்து வந்தார்கள் அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை இருந்தது,அவள் பெயர் அனிதா. அவள் தாய் மீண்டும் கருவுற்றிருந்தாள். அவர்களுக்கு தெரியும் வயிற்றில் வளர்வது ஆண் குழந்தையாகத்தான் இருக்கும் என்று.
பெற்றோர்கள் இருவரும் அனிதாவிடம் உனக்காக ஒரு தம்பி பாப்பா வரப்போகிறான். நீயும் அவனும் சேர்ந்து ஜாலியா விளையாடப்போறீங்க என்று சொல்லியே வளர்த்தார்கள்.
அனிதா அவள் அம்மா வயிற்றில் தினமும் கைகளால் தடவிக்கொண்டே டேய் தம்பி சீக்கிரம் வெளியே வாடா நாம ஜாலியா விளையாடலாம் நான் உன்னை யாருக்கும் குடுக்க மாட்டேன், நான் மட்டுமே உன் கூட விளையாடுவேன் என்று சொல்லிக்கொண்டே இருப்பாள்.
அனிதா இன்னும் முகம் பார்க்காத தன் தம்பியிடம் அவ்வளவு பாசமாக இருப்பதை பார்த்து அவள் பெற்றோர் மகிழ்ச்சி அடைந்தார்கள்.அனிதாவுக்கும் தினமும் அம்மா வயிற்றில் இருக்கும் குழந்தையிடம் பேசுவதே வாடிக்கையாக இருந்தது.
நாட்கள் உருண்டோடின பிரசவ வலி எடுக்கவே மருத்துவமனையில் சேர்த்தார்கள்.பிரசவம் நார்மலாக இருக்கும் என்று நினைத்தார்கள் ஆனால் மிக சிக்கலாகி ஆப்ரேஷன் பண்ணிதான் குழந்தையை வெளியே எடுத்தார்கள்.மருத்துவர்கள் குழந்தை மிக பலவீனமாக இருக்கிறது இன்னும் சில நாட்களே உயிரோடு இருக்கும் என்று கூறி ICU வில் அட்மிட் பண்ணினார்கள்.
அனிதாவையும் அவள் தந்தையையும், குழந்தையையும் அம்மாவையும் பார்க்க அனுமதிக்கவே இல்லை.பிறகு அனிதாவின் தந்தையை மட்டும் அனுமதித்தார்கள் அவர் உள்ளே சென்று குழந்தையை பார்த்துவிட்டு வந்தார்.
ஒரு வாரம் ஓடி விட்டது அனிதா அடம் பண்ண ஆரம்பித்தாள் நீ மட்டும் பார்த்துட்டு வந்தியே நானும் தம்பியை பார்க்கனும் என்று கத்தினாள்.உன் தம்பி சாமிக்கிட்ட போகபோறான் உன்னை மருத்துவமனையில் பார்க்க அனுமதிக்கமாட்டாங்கம்மா என்று அவள் அப்பா சொன்னார்.அவள் அழுது ஆர்ப்பாட்டம் பண்ணவே சரி நாளைக்கு எப்படியாவது உன்னை உள்ளே கூட்டிட்டு போறேன் என்றார்.
மறுநாள் மருத்துவமனயில் அனிதாவையும் குழந்தையை பார்க்க அனுமதிக்கவேண்டும் என்று கேட்டார் ஆனால் குழந்தையை ICU வுக்குள் செல்ல அனுமதிக்கமாட்டோம் என்று கூறினார்.பிறகு அவர்கள் கெஞ்சுவதை பார்த்து அனுமதித்தார்கள்.
அனிதா உள்ளே ஓடிச் சென்று குழந்தையின் பிஞ்சு விரலை பிடித்தாள்,அவள் கை பட்டதும் குழந்தை லேசாக அசைந்தது. ’டேய் தம்பி எழுந்து வாடா நாம விளையாடலாம்’ என்றாள். குழந்தை லேசாக மூச்சு விட ஆரம்பித்தது. ’உன்னை நான் சாமிக்கிட்ட கொடுக்கமாட்டேன், நானே வச்சுக்குவேன், நீ என் கூடத்தான் இருக்கனும்’ என்றாள். இப்போது குழந்தையின் மூச்சு சீராக வர ஆரம்பித்தது.
மருத்துவர்களே ஆச்சரியப்பட்டார்கள் குழந்தையை பரிசோதித்து பார்த்து விட்டு இனி நீங்கள் பயப்படத் தேவை இல்லை என்றார்கள்.
நாம ஒரு பொருள் மேல உண்மையான பாசம் வச்சிட்டா அந்த ஆண்டவனே நினைச்சாலும் நம்ம கிட்ட இருந்து பிரிக்க முடியாதுங்க...!!
★ஒரு கிராமத்தில் ஒர் நாகபாம்பு இருந்தது. அந்த பாம்பு வழியிலே யாரையும் செல்லவிடாது..அங்கு சென்ற பலரை தீண்டி கொன்றது. கிராமத்தினர் அந்த வழியை உபயோகிக்கவே அஞ்சினர். ஒரு நாள் அந்த வழியாக ஒரு குரு வந்தார்.. அந்த வழியை அவர் கடக்க முற்பட்ட போது எல்லோரும் அவரை தடுத்தார்கள் ஆனாலும் அவர் போனார்.
★அவரை தீண்ட அந்த நாகம் வந்தது.. ஆனால் அவர் தன்மை நாகபாம்பையே அமைதியடைய செய்தது. அந்த நாகபாம்பிடம் குரு "ஏன் நாசம் செய்கிறாய், கொலையாளி ஆகி என்ன அடையப்போறாய், அதில் என்ன பயன்" என கூறி அதற்கு அமைதியை கற்றுக் கொடுத்தார்..அன்றில் இருந்து அந்த நாகம் அமைதி காக்க தொடங்கியது.!
★யாரையும் அதற்கு தீண்ட பிரியம் இல்லையென அறிந்த கிராம மக்கள் தைரியம் பெற்று அந்த நாகபாம்பை கல்லெறிவதும் குச்சி கொண்டு அடிப்பதுமாக துன்புறுத்தினார்கள். அது துன்பம் தாங்க முடியாது புற்றில் உணவின்றி ஒளிந்து இருந்தும் அதை கொடுமைப் படுத்தினார்கள்.
★ஒரு வருடத்துக்கு பின் அந்த குரு அந்த பக்கமாக வந்தார். பரவசத்தோடு அவர்பாதத்தில் வந்து பணிந்து நின்றது. அதன் உடலில் தழும்புகளை கண்ட குருக்கு எல்லாம் புரிந்து. "உனக்கு என்ன நடந்தது என்றார்..?" அது யார்மீதும் குற்றம் சுமத்தாத தன்மை அடைந்ததால் ,நான் சாப்பிடாமல் பலவீனமாகி விட்டேன்"என்றது.. அது மட்டுமல்ல உடலில் என்ன தழும்பு என கேட்டார். உள்ளூரில் இருப்பவர்கள் என்னை அடித்து சந்தோசம் அடைகிறார்கள் என்றது.
★உன்னை யாரையும் தீண்ட வேண்டாம் என்றுதான் சொன்னேன் சீறவேண்டாம் என்று சொல்லவே இல்லையே, சீறாமல் இருப்பதுதான் ஆன்மீகம் என்றல்ல, நான் சொன்னதை தவறாக புரிந்து கொண்டு விட்டாய். நீ சீற வேண்டிய நேரத்தில் சீறாவிட்டால் உன்னை பாம்பு என்பதையே மறந்து விடுவார்கள் என கூறி அன்போடு தடவி விட்டு போனார் குரு.
★ஆம். நாமும் இந்த உலகில் சிலசமயம் சீறவேண்டிதான் உள்ளது.. ஆனால் அதில் விருப்பு வெறுப்பற்ற தன்மையில் சீறவேண்டும் இல்லாவிட்டால் நாம் மனிதர் என்பதையே மறந்து விடுவார்கள்.

Tuesday, 1 March 2016

ஜென் கதை:



ஒரு துறவியும் அவருடைய சீடரும் காட்டு வழியாக நடந்து போய்க் கொண்டிருந்தார்கள் . 

அந்த நேரத்தில் வெகுதூரத்தில் ஒரு புலி உருமுவதும் அது அவர்களை நோக்கி வருவதும் தெரிந்தது. 

உடனே சீடன் " குருவே புலி நம்மை நோக்கி வருவது போல் உள்ளது . 

அதனால் நாம் திரும்பி வேறு பாதை வழியாக போய் விடுவோம் " என்றான் . 

ஆனால் குரு சீடரின் வார்த்தையை கேட்கவில்லை . "புலி நம்மை ஒன்றும் செய்யாது " என்று சீடனிடம் சொல்லிவிட்டு அந்த இடத்திலேயே அமர்ந்து தியானம் செய்ய ஆரம்பித்து விட்டார் . 

சீடனையும் தியானம் செய்யுமாறு கூறினார் . குருவின் பேச்சை தட்ட முடியாத சீடனும் அந்த இடத்தில் அமர்ந்து தியானம் செய்ய ஆரம்பித்தான்.

வேகு நேரம் ஆனது தியானம் முடிந்து சீடன் கண்களை திறந்து பார்த்தான் . 

குருவின் பக்கத்தில் அந்த புலி அமைதியாக அமர்ந்திருந்தது.

சீடன் குரு விழித்ததும் அவரிடம் கேட்டான் எப்படி குருவே கோவமாக உருமிக்கொண்டு வந்த புலி அமைதியானது. 

"நாம் நம்மை சுற்றி எவ்விதமான அலையை பறப்புகிறோமோ நம்மிடம் வருபவர்களும் , நம்மை சுற்றி இருப்பவர்களும் அது போலவே மாறிவிடுவார்கள்" என்று கூறினார் அந்த குரு .

எனவே நம்மை சுற்றி நல்ல எண்ணங்களையே எண்ணுவோம் , மனதை அமைதியான நிலையிலேயே வைத்துக் கொள்வோம் .

நம்மைச் சுற்றி இருப்பவர்களும் நல்லவர்களாகவே இருப்பார்கள் .